ரத்லம்:

ரூ9 லட்சம் கடனிலிருந்து தப்பிக்கவும், ரூ. 20 லட்சம் காப்பீடு பெறுவதற்காகவும் தன்னிடம் வேலை பார்த்தவரை கொலை செய்து, தான் கொலை செய்யப்பட்டதாக ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஹிம்மத் பட்டிடார் மற்றும் மதன் மால்வியா.

மத்தியப் பிரதேசம் ரத்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஹிம்மத் பட்டிடார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர தொண்டர். கடந்த சில நாட்களுக்கு பட்டிடார் எரித்துக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

இதனையடுத்து, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகத் தெரிவித்தார். தொடர்ந்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் அரசே காரணம் என்றும் குற்றச்சாட்டினார்.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது, இது குறித்து போலீஸார் கூறியதாவது;

ஆர்எஸ்எஸ் தொண்டர் ஹிம்மத் பட்டிடார் ரூ. 9 லட்சம் வரை கடன் பெற்றிருந்தார்.
கடன்காரர்கள் நெருக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் அவரது மனதில் சதித் திட்டம் உதித்தது.

தன் வயலில் வேலை பார்த்து வந்த மதன் மால்வியாவை கொலை செய்தார். தனது உடையை மதன் மால்வியாவுக்கு அணிவித்தார். தனது போன் மற்றும் ஆவணங்கள் சிலவற்றை சட்டைப் பையில் வைத்தார்.

பின்னர் உடலை எரித்துவிட்டு, தான் கொல்லப்பட்டதாக எல்லோரையும் நம்ப வைத்தார். கடந்த ஜனவரி 22-ம் தேதி அங்கிருந்து தலைமறைவானார்.

வாங்கி கடனையும் கொடுக்கக் கூடாது. அதே சமயத்தில், ரூ20 லட்சத்துக்கான காப்பீட்டுத் தொகையையும் பெற வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருந்திருக்கிறது.

இந்நிலையில், வயலில் வேலை பார்த்து வந்த மதனையும் கடந்த 22-ம் தேதி முதல் காணவில்லை. வயலில் கிடந்த உள்ளாடையை வைத்து, இது மதன் என்று அவரது உறவினர் அடையாளம் காட்டினார்.
அந்த பகுதியை ஆய்வு செய்தபோது, வயல்வெளியில் மதனின் பூட்ஸ் கிடந்தது.

இதனை பரிசோதித்தபோது, இது மதனின் உடல்தான் என்று உறுதியானது. தலைமறைவாகவுள்ள ஹிம்மத் பட்டிடாரை தேடி வருகின்றோம் என்றனர்.

இதற்கிடையே பாஜக தலைவர் பிரகலாத் பந்த்வார் கொல்லப்பட்ட சம்பத்தையும் பாஜகவினர் அரசியலாக்கினர். போலீஸ் விசாரணை நிறைவில், தன் கட்சித் தொண்டர் மணீஷ் பைராகி என்பவராலேயே அவர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.