சென்னை: தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் கட்டப்பட்டு வரும் பத்மாவதி தாயார் கோவில் அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரியில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவருக்கு சொந்தமான ஆறு கிரவுண்டு இடம் தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் இருந்தது. அதனை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கினார். சென்னை தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
இதையடுத்து, நடிகை காஞ்சனா வழங்கிய நிலத்தில், பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தலைமையில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 22ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மன்னர்கால முறையிலான கற்களை கொண்டு கட்டப்படு கிறது.இந்த கோவில் கட்டுமானத்திற்காக, 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள ஆறு கிரவுண்டு இடத்தில், மூன்று கிரவுண்டு கோவிலும், மீதமுள்ள இடத்தில் மண்டபம், மடப்பள்ளி, சுவாமி வாகனங்கள் வைக்கும் இடம் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன.
இந்த கோவிலில், திருப்பதி அடுத்த திருச்சானுாரில் இருப்பது போன்று, பத்மாவதி தாயார் சிலை, இக்கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ”சென்னையில் பத்மாவதி தாயார் கோவிலை அடுத்து, கள்ளக்குறிச்சியில் டி.டி.டி., சார்பில், வெங்கடேச பெருமாள் கோவில் கட்டப்படுகிறது.
இநத் நிலையிலி தி.நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் பத்மாவதி தாயார் கோவில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போதைய முன்னேற்றத்தின்படி, வரும் பிப்ரவரி மாதம் கோயில் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது. கோவிலில், புஷ்கரணி, வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அனைத்து நவீன வசதிகளுடன் மூன்று மைதானங்களில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலத்தை தானமாக கொடுத்த நடிகை காஞ்சாவுக்கு தற்போது வயது 84.