சென்னை; சென்னையில் வாக்குச்சாவடியில் மயங்கிவிழுந்த போலீஸ்காரருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார் பாஜக தலைவரும் அத்தொகுதியின் வேட்பாளருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.
விருகம்பாக்கம் பாலலோக் பள்ளியில் இன்று காலை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தது. அப்போது அத்தொகுதியின் வேட்பாளரும் பாஜக தமிழக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வாக்களிக்க வருகைபுரிந்தார். வாக்காளர்களின் வரிசையில் அவர் நின்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு பணியில் இருந்த சூர்யா என்ற காவலர் திடீரென மயங்கிவிழுந்தார்.
அப்போது உடனடியாக தமிழிசை சௌந்தரராஜன் அந்த காவலருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப்பிறகு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த காவலர் மேற்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வாக்களிக்க வந்த இடத்தில் வேட்பாளர் மயங்கிவிழுந்த காவலருக்கு சிகிச்சையளித்த சம்பவத்தை கண்டு அங்கிருந்த வாக்காளர்கள் நெகிழ்ந்தனர். . தமிழிசை சௌந்தரராஜனிடம் இது குறித்து கேட்டபோது, “இருபத்திநான்கு மணி நேரமும் அரசியல் சேவையில் இருப்பதுபோல இருபத்துநான்குமணி நேரமும் மருத்துவர்தான்” என்றார்.