கிரிக்கெட்டில் எந்தவகை விளையாட்டாக இருந்தாலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டிவென்டி20), அதில் சில நம்பமுடியாத மற்றும் சிலிர்க்கச் செய்யும் ஆட்ட நேரங்கள் ஏற்படுவது வழக்கமானதே.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடந்துவரும் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டிகளில், அதுபோன்ற திடீர் அதிசயங்களுக்கும் சாதனைகளுக்கும் பஞ்சமிருக்குமா என்ன?

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடர்களின் போட்டிகளில் நிகழ்ந்த, சில எதிர்பாராத திருப்பங்களை கிரிக்கெட் ரசிகர்களின் நினைவு ஓட்டத்தில் நிலைநிறுத்த முயல்வோம்.

2009ம் ஆண்டு ஐபில்: டெக்கான் சார்ஜர்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் இடையிலான போட்டி. டெல்லி அணி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கிய டெக்கான் அணியின் கில்கிறிஸ்ட், காட்டு காட்டென காட்டினார். 24 பந்துகளில் 50 அடித்தார். சரி, கில்கிறிஸ்டின் வழியை அவரது அணியினரும் பின்பற்றுவார்கள் என பலரும் நம்ப, திடீரென நிலைமை வேறாகிவிட்டது.

டெல்லி அணியின் ரஜத் பட்டியா என்ற பந்துவீச்சாளர் டெக்கான் அணி விக்கெட்டுகளை, தேயிலைக் கொழுந்து பிடுங்குவதைப்போல் பிடுங்கி எடுத்துவிட்டார். தொடக்கத்தில் ஜாலம் காட்டிய டெக்கான் அணி, வெறும் 12 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து துவண்டுபோனது.

2010ம் ஆண்டு ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், பிரவீன் குமார் என்ற பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர், ராஜஸ்தான் அணியின் மீது, பலநாள் தேக்கி வைத்திருந்த கோபத்தைக் காட்டுவதுபோல் பந்துவீசினார். வெறும் 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை, சந்தையில் தக்காளி பொறுக்குவதைப் போல் பொறுக்கி எடுத்துவிட்டார். அந்தப் போட்டியில், அவர் ஹாட்ரிக்கும் எடுத்தார்.

16.2 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து, 85 ரன்களை எடுத்திருந்த ஒரு அணி, 20 ஓவர்களின் முடிவில் எப்படியும் 120 ரன்களை தாண்டிவிடும் என்பதுதானே இயல்பான எதிர்பார்ப்பு.

ஆனால், பிரவீன்குமார் வடிவில் வந்த ஆபத்தால், 19.5 ஓவர்களில் வெறும் 92 ரன்களை மட்டுமே எடுத்து நத்தைபோல் சுருண்டுவிட்டது ராஜஸ்தான் அணி.

2013ம் ஆண்டு ஐபிஎல்: புனே வாரியர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில், 120 ரன்கள் இலக்கை விரட்டிய புனே அணி, ஒரு கட்டத்தில் 101 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. 1 பந்துக்கு 1 ரன் எடுக்க வேண்டிய எளிய நிலைதான்.

ஆனால், அவர்களுக்கு வாய்த்த கெட்ட நேரம்! அடுத்த 7 ரன்களை எடுப்பதற்குள், தன் கைவசம் மீதம் வைத்திருந்த 6 விக்கெட்டுகளையும் வாரிக் கொடுத்துவிட்டது புனே அணி. இந்த பரிதாப நிலைக்கு ஆளாக்கிய எதிரணி பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, பந்துவீச்சில் தான் எந்தவொரு சிறப்பு நுட்பத்தையும் பயன்படுத்தவில்லை என்று வேறு கூறி, புனே அணியை மேலும் கடுப்பேற்றி நோகடித்தார்.

2008ம் ஆண்டு ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரிய ஸ்கோரை எட்டும் என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆரம்பமும் அப்படித்தான் இருந்தது.

74 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த அந்த அணி, பின்னர் மும்பை பந்துவீச்சு படையினரிடம் ஏடாகூடமாக மாட்டிக் கொண்டது. 16.2 ஓவர்களில் அனைத்து ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களும் தம் கடமையை முடித்துவிட்டு, தம் உழைப்பின் பலனாக 103 ரன்களை மட்டுமே அணியின் கணக்கில் சேமித்துவிட்டு நடையைக் கட்டினார்கள்.

அதாவது, 29 ரன்களை எடுக்க 8 பேட்ஸ்மேன்கள் தேவைப்பட்டுள்ளனர் ராஜஸ்தான் அணிக்கு.

2008ம் ஆண்டு ஐபிஎல்: டெக்கான் சார்ஜர்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில், ஆட்டத்தின் முதல் பகுதியில் பிரமாதமாக ஆடியது டெக்கான் அணி. 101 ரன்கள் எடுக்கும்வரை, விக்கெட்டுகளையே இழக்கவில்லை அந்த அணி. எப்படியும் 200 ரன்களைத் தாண்டும் என்பதே ரசிகர்களின் கணிப்பு!

பின்னர், 164 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை பார்வையாளர்கள். ஆனால், அதன்பிறகுதான் என்ன ஆனதென்றே தெரியவில்லை. எல்லாம் சொல்லிவைத்தாற்போல் நடந்தது.

164 என்ற நிலையிலிருந்து ஜஸ்ட் ஒரு படி எடுத்துவைத்து 165 என்ற நிலைக்கு செல்வதற்குள், சீட்டுக் கட்டைவிட மோசமாக, எஞ்சியிருந்த 5 விக்கெட்டுகளும் சரிந்துவிட்டன.

ஆம். ஐபிஎல் கிரிகெட்டில், நாம் இதைப்போல நிறைய பார்த்துப் பழகிதான் தீரவேண்டும் போல..!

– மதுரை மாயாண்டி