சென்னை,

ங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்வதற்காக  ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தவிர்க்க கோரியும், பதிவு செய்ய தடை கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோட்டில் வழக்கு  தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை  விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக பதிவு செய்யக் கூடாது என தடை விதித்தது. மேலும்  இதுகுறித்து அரசு புதிய சட்டம் இயற்றவும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

இதன் காரணமாக அவசர தேவைக்கு நிலங்களை விற்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,  உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, அகில இந்திய மனை மேம்பாட்டாளர்கள், முகவர்கள் கூட்டமைப்பு, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத் தரகர்கள் நலச் சங்கம் உள்ளிட்டவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால் உச்சநீதி மன்றமும், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, இன்று (27ந்தேதி) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இன்றைய விசாரணையின்போதும் தமிழக அரசு மேலும் அவகாசம் கோரியது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் கொள்கை முடிவு எடுக்கவும், விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என்றும் கூறியுள்ளனர். அடுத்த விசாரணை மார்ச் 28ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.