ஸ்ரீஹரிகோட்டா:
நிலவில் தரையிறக்கும்போது தகவல் துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.
நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்2 விண்கலம் வெற்றிகரமாக நிலவை சென்றடைந்த நிலை யில், அதில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை தரையிறக்கும் பணியின்போது, திடீரென தகவல் துண்டிக்கப்பட்டது.
விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே என்பதால், அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். அதுபோல நாசாவும் முயற்சி மேற்கொண்டது.
நிலவின் இரவுப் பொழுது, பூமியில் 14 நாட்களுக்கு சமமாகும். நிலவின் தென்துருவத்தில் இரவுப் பொழுது தொடங்கிய நிலையில், லேண்டருக்கு தேவையான சூரிய ஒளி கிடைக்காது என்பதால் அதன் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே. தற்போது நிலவின் தென்துருவத்தில் கடுங்குளிர் நிலவி வருவதால் , 14 நாட்களுக்குப் பிறகு, லேண்டர் விக்ரமின் நிலை எப்படி இருக்கும் என்பது உறுதிபடத் தெரியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், லேன்டரின் ஆயுட்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சிவன் கூறியுள்ளார்.
ஆர்பிட்டரில் உள்ள 8 கருவிகளும் அவற்றிற்குரிய பணியை துல்லியமாக செய்து வருவதாக தெரிவித்தவர், விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.