சென்னை: “தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தை அதிமுகவின் கிளைக்கழகமாக மாற்ற துடிக்கும் ஊழல் முதல்வரும் – ஊழல் அமைச்சரும் பங்கேற்கும் தெரிவுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று முறைகேடுகளுக்குத் துணை போக இயலாது” என எதிர்க்கட்சித் தலைவரும், திமுகழக தலைவருமான மு.க.ஸ்டாலின்  அரசு செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் அரசு செயலாளருக்குக் கடிதம் விவரம்:-

பெறுநர்:-
டாக்டர் சீ.ஸ்வர்னா இ.ஆ.ப அவர்கள்
அரசு முதன்மைச் செயலாளர்,
பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த (நி.சீ III)த்துறை
தலைமைச்செயலகம்
சென்னை-600 009.
அன்புடையீர், வணக்கம்.
பொருள்: 2005-ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம்- தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் – மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் – தெரிவுக்குழு ஆலோசனைக் கூட்டம்- தொடர்பாக.
பார்வை: தங்கள் கடித எண் 5033/நி.சீ.III/ 2020-13 நாள் 18.01.2021
***
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிரப்பப்படாமல் உள்ள இரண்டு மாநில தகவல் ஆணையர் பணியிடங்களுக்கு நியமனம் செய்திட – மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு பரிந்துரையளிக்கும் தெரிவுக்குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் 1.02.2021 அன்று பிற்பகல் 01.30 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் அறையில் நடைபெறுவதாகவும் – அக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து பார்வையில் கண்டுள்ள கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
மாநில தகவல் ஆணையர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள், தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள தகுதியானவர்களின் பட்டியல் போன்ற எதுவும் மேற்கண்ட கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படவில்லை. யாரெல்லாம் விண்ணப்பித்தார்கள் – யாரெல்லாம் தகுதியானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளார்கள் என்பதே முன்கூட்டியே தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல், தெரிவுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிப்பது இயலாத காரியம் என்பது நன்கு தெரிந்தும்- இப்படியொரு கடிதத்தை எனக்கு அனுப்பி, கூட்டத்தில் பங்கேற்க அழைப்பது மாநில தகவல் ஆணையர் தேர்வின் வெளிப்படைத்தன்மையை இருட்டடிப்புச் செய்வது மட்டுமின்றி – முறைப்படி தேர்வு செய்தோம் என்று ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றே கருதுகிறேன்.
“அரசு நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மையையும் ஒளிவுமறைவற்ற தன்மையையும் கொண்டு வருவதே” 2005ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கம்! ஆனால், தெரிவுக்குழு உறுப்பினருக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்களைக்கூட பரம ரகசியமாக வைத்துக் கொண்டு ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது ஆச்சர்யமாகவும் – தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு விரோதமாகவும் இருக்கிறது. மாநில தகவல் ஆணையம் அதிமுக ஆட்சியில் முடங்கிக் கிடப்பதால், அரசுத் துறைகளில் வெளிப்படைத்தன்மைக்கு ஏற்கனவே விடை கொடுக்கப்பட்டு விட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆண்டறிக்கை வெளியிடப்பட வேண்டும். அந்த அறிக்கையைக் கூட மாநில தகவல் ஆணையத்தின் இணைய தளத்தில் 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு காண முடியவில்லை என்பது கண்டனத்திற் குரியதாகும். ஆட்சியின் ஊழல் வெளிவந்து நாட்டு மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக – மாநில தகவல் ஆணையத்தை அதிமுக ஆட்சியும்- அதற்கு தலைமையேற்கும் முதலமைச்சரும் சுயநல நோக்கில் பயன்படுத்துவது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களையே தகர்க்கும் விதத்தில் அமைந்து விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் திரு பழனிச்சாமி மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கும் – அவரது அமைச்சரவை சகாக்கள் மீது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார்களையும் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தங்கள் மீதான ஊழல் முறைகேடுகள் வெளிவராமல் இருக்க, மாநில தகவல் ஆணையத்தை செயல்பட விடாமல் தடுக்கின்ற அதிமுக ஆட்சியில் நடைபெறும் – அதுவும் தேர்தல் நன்னடத்தை விதிகள் வருவதற்கு முன்பு அவசரம் அவசராக இரு மாநில தகவல் ஆணையர்களை தேர்வு செய்து – தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தை அதிமுகவின் இன்னொரு கிளைக் கழகமாக மாற்றிடத் துடிக்கும் ஊழல் முதலமைச்சரும், ஊழல் அமைச்சரும் பங்கேற்கும் இந்த தெரிவுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று முறைகேடுகளுக்குத் துணை போக என்னால் இயலாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நன்றி.
தங்கள் அன்புள்ள,
(ஒப்பம்) XX XX XX
(மு.க.ஸ்டாலின்)