சென்னை,

.நா. அவையின் ஒரு மன்றத்தில் தனிப்பட்ட முறையில் என்.ஜி.ஓ. அமைப்பு நடத்திய கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. ஆனால் தான் வர முடியாது என்று ஐ.நா.வுக்கே அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

அதாவது ஐ.நா.வுக்கு தொடர்பில்லாத விசயத்தை, தொடர்பு படுத்தி நினைத்துக்கொண்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின்” என்று ஒரு செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், “இதே போல ம.தி.மு.க. பொதுச்செயலாளரும் நடந்துகொண்டிருக்கிறார்” என்கிறது பா.ம.க. சார்புடைய “பசுமைப் பக்கங்கள்” என்ற இணைய பக்கம்.

அந்த பக்கத்தில் வெளியாகியுள்ள கட்டுரை இதோ:

‘வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது’ என்றும், ‘ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக வைக்கப்பட்டது’ என்றும் மதிமுக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.


மதிமுக பொய்ப்பிரச்சாரம்

“தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – என்கிற வைகோ வேண்டுகோளை ஐநா மன்றம் சுற்று அறிக்கையாக முன் வைத்துள்ளது” – என்று மதிமுக கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ‘வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக’ வைக்கபட்டதாகவும், அதன் படி வைகோ அவர்களின் கோரிக்கை ஐநா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஆய்வுக்காக சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மதிமுகவின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

உண்மை என்ன?

ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எவ்வாறு கற்பனைக் கதைகளை கட்டிவிடுகின்றன என்பதற்கு மதிமுகவின் இந்த அறிக்கையை எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஐநா அவையின் விதிகளின் படி, மதிமுக தலைவர் வைகோவின் கடிதத்தை சுற்றுக்கு விடவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ இடம் ஏதும் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவும் இல்லை.

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள், உறுப்பினர் அல்லாத நாடுகள், ஐநா அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த பங்கேற்பின் வழியாக மூன்று வழிகளில் கருத்துக்களை முன்வைக்கலாம். 1. எழுத்துபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிப்பது (NGO Written Statement). 2. மனித உரிமைகள் கூட்டத்தில் நேரடியாக பேசுவது (NGO Oral Statement). 3. துணைக்கூட்டங்கள் (NGO Side-Event) நடத்துவது – ஆகியனவே பங்கேற்கும் வழிகள் ஆகும்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு, ஐநா அவையின் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்பாக 2005 ஆம் ஆண்டுமுதல் செயலாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் நீதிக்கான குரலை ஐநா மனித உரிமைகள் பேரவையில் எழுப்பி வருகிறது.

மதிமுக குறிப்பிட்டுள்ள அதே 34 ஆம் கூட்டத்தில் – பசுமைத் தாயகம் சார்பில் இரண்டு எழுத்துபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆறு முறை மனித உரிமைகள் கூட்டத்தில் நேரடியாக பேசப்பட்டது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமாரும் பேசினர்.  இரண்டு துணைக்கூட்டங்கள் பசுமைத் தாயகம் சார்பில் நடத்தப்பட்டன.

வைகோவின் கோரிக்கை விவகாரம் என்ன?

மதிமுக ஐநாவின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல. எனவே, அவர்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கைகளை எழுப்பும் வாய்ப்பு இல்லை. அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் எழுத்துபூர்வமான அறிக்கைகளை வைக்கலாம் என்கிற வகையில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் 2 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை ஐநா மனித உரிமைகள் பேரவை சுற்றுக்கு விட்டது. இதுபோன்று, 34 ஆம் கூட்டத்தொடரில் மொத்தம் 259 அறிக்கைகள் சுற்றுக்கு விடப்பட்டன.

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் 10 தலைப்புகளாக பிரிக்கப்படும். அதில் எந்த ஒரு தலைப்பின் கீழும் அறிக்கைகள் சமர்ப்பிக்கலாம். பசுமைத் தாயகம் அமைப்பின் அறிக்கைகள் முறையே நிகழ்ச்சி நிரல் 2 மற்றும் 4 ஆவது தலைப்பின் கீழ் சுற்றுக்கு விடப்பட்டன. (எண்: HRC/34/NGO/141 by the Pasumai Thaayagam) மற்றும் HRC/34/NGO/143 by the Pasumai Thaayagam)

இதே போன்று – வைகோ அவர்களின் கடிதமும், ஆப்பிரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது (எண்: HRC/34/NGO/240 by the Association Bharathi Centre Culturel Franco-Tamoul, Association Burkinabé pour la Survie de l’Enfance,). பசுமைத் தாயகம் அறிக்கை சுற்றுக்கு விடபட்டது போலவே, இந்த அறிக்கையும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.

அதாவது, வைகோ அவர்களின் கடித்ததை ஐநா மன்றம் சுற்றுக்கு விடவில்லை. மாறாக, ஆப்பிரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள அரசுசாரா அமைப்புகளின் அறிக்கைதான் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த அறிக்கைக்குள் வைகோ அவர்களின் கடிதம்  அறிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது. 34 ஆம் கூட்டத்தொடரின் 259 அறிக்கைகளில் இதுவும் ஒன்று.

அதுமட்டுமல்லாமல் – //ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ‘வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக’//  வைக்கப்படவில்லை. 259 அறிக்கைகளை தலைப்பு வாரியாக பிரிக்கும் வகையில், ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகளின் அறிக்கை 2 ஆவது தலைப்பின் கீழ் உள்ளது.

பசுமைத் தாயகத்தின் பணி

2009 ஆம் ஆண்டு முதல் ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டங்களில் அறிக்கை, நேரடி பேச்சு, துணைக்கூட்டம் என எல்லா வழிகளிலும் பசுமைத் தாயகம் பங்கேற்று வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட அறிக்கைகள், 50-க்கும் மேற்பட்ட நேரடியாக உரைகள், 10 துணைக் கூட்டங்களை நேரடியாக நடத்தியுள்ளது பசுமைத் தாயகம்.

ஆனால், ஒரு முறை வேறு அமைப்புகள் மூலம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு, அதனை ஐநா ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்தது போல மதிமுக அறிக்கை விடுவது வியப்பளிக்கிறது!.

அதிலும் ‘வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது என்றும், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ‘வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக’ வைக்கப்பட்டது என்றும் கூறுவது அப்பட்டமான பொய்ப்பிரச்சாரம் தவிர வேறு எதுவும் இல்லை.