வாஷிங்டன்

பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் விடுதலைக்கு ஐநா சபை செயலர் அண்டானியோ கட்டர்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் அந்த இயக்கம் மேலும் பல தற்கொலைப்படை தாக்குதலை நடத்த காஷ்மீர் எல்லையில் முகாமிட்டிருந்தனர். இந்திய விமானப்படை அந்த முகாம்களின் மீது குண்டு வீசி தாக்கி அவர்களை அடியோடு அழித்தது.

அதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் தனது விமானப்படை மூலம் எல்லை தாண்டி வந்து இந்தியாவை தாக்கியது. பாகிஸ்தான் விமானப்படையை விரட்டிச் சென்ற இந்திய விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு அதை ஓட்டிச் சென்ற இந்திய விமானி அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 60 மணி நேரம் அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்து வைத்திருந்தது.

உலக நாடுகள் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அரசு நேற்றிரவு அபிநந்தனை விடுதலை செய்து வாகா எல்லைக்குள் கொண்டு வந்து விட்டது. அபிநந்தன் விடுதலைக்கு பல இந்திய அரசியல் தலைவர்கள், உலகத் தலைவர்கள், திரை மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் என அனைவரும் வரவேற்பும் வாழ்த்துச் செய்திகளும் அளித்து வருகின்றனர்.

வீங் கமாண்டர் அபிநந்தன் விடுதலைக்கு ஐநா சபை செயலர் அண்டானியோ கட்டர்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அண்டோனியோ கட்டரஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், “ஐ நா செயலர் அண்டானியோ கட்டர்ஸ் இந்திய விமானி விடுதலை செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தற்போது இரு நாடுகளும் முன்னேற்ற எண்ணத்துடனும், அமைதியை நிலவும்படி செய்யவும் ஆக்கபூர்வமாக பாடுபட வேண்டும் என அவர் விரும்புகிறார்” என தெரிவித்துள்ளார்.