நியூயார்க்

ந்திய பத்திரிகையாளர்கள் சந்தீப் சர்மா மற்றும் நவின் நிஸ்சல் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு ஐநா தலைவர் அண்டானியோ கட்டர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளராக பணிபுரிபவர் சந்தீப் சர்மா (வயது 35)  இவர் அந்தப் பகுதியில் உள்ள சட்டவிரோத மணல் குவாரிகளைப் பற்றிய செய்திகளை தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.    கடந்த 2017ஆம் வருடம் ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இது குறித்த விரிவான தகவல்களையும் இந்த மணற் கொள்ளையை போலீசார் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுக் கொள்ளாமல் இருப்பதையும் பற்றி எழுதி வந்தார்.

இதனால் அவருக்கு நேரடியாகவே கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன.  சில தினங்களுக்கு முன்  அவர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது  அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோதி மரணம் அடைந்துள்ளார்.   அவருடன் பயணம் செய்த அவர் நண்பர் இந்த விபத்து திட்டமிட்டு நடைபெற்றது என காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

பீகாரின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் நவின் நிஸ்சல் என்னும் பத்திரிகையாளர் ஒரு இந்தி  தினசரி பத்திரிகையில் பணி புரிந்து வந்தார்.    இவர் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத் தலைவர் சம்மந்தப்பட்டதாக கூறப்படும் கொலை வழக்கு பற்றிய விவரங்களை செய்தித் தாளில் வெளியிட்டு வந்தார்.   இவரும்  அடையாளம் தெரியாத ஒரு லாரி மோதியதில் மரணம் அடைந்துள்ளார்.

இந்த இரு மரணங்களும் திட்டமிட்ட கொலை என பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசப்பட்டது.   இந்த இரு விவகாரமும் தற்போது சர்வதேச அளவில் பேசப்பட்டு ஐநா சபைக்கும் இது குறித்த தகவல்கள் எட்டி உள்ளன.  இந்த கொலைக்கு ஐநா சபையின் தலைவர்களில் ஒருவரான அண்டானியோ கட்டர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐநா சபையின் ஆசியப் பகுதி செயலாளர் ஸ்டீவன் பட்லர் இது குறித்து,  “ஏற்கனவே கொலை மிரட்டல் விடப்பட்டுள்ள இரு இந்திய பத்திரிகையாளர்கள்  கொலைக்கு உள்ளூர் காவல் துறை அதிகாரிகளே காரணம்.   இந்தக் கொலையை சரியான முறையில் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும்”  என கருத்து தெரிவித்துள்ளார்.