வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் முன் அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டு அதிபர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

ரஷ்யா உடனான போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ராணுவ தளவாடங்களை வழங்கி உதவி செய்த நிலையில் உக்ரைன் அதற்கான நன்றி விசுவாசத்தை காட்டவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் குற்றம்சாட்டினர்.

அமெரிக்க அதிபரின் விருந்தினராக அங்கு சென்ற ஜெலன்ஸ்கிக்கு வான்ஸ் குறிப்பிட்ட சில கடந்த கால சம்பவங்கள் ஆத்திரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதை அடுத்து அவர்களின் உடல்மொழியிலேயே பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் ஜெலன்ஸ்கி பதிலளித்தார்.

மேலும், ஊடகங்கள் முன் அமெரிக்காவை ஜெலன்ஸ்கி வறுத்தெடுத்ததை அடுத்து இது அமெரிக்க மண்ணில் அமெரிக்காவை அவமதிக்கும் செயல் என்று அதிபர் டிரம்ப் ஆத்திரத்துடன் கூறினார்.

இருந்தபோதும் ஜெலன்ஸ்கி சற்றும் விட்டுக்கொடுக்காமல் பேசியதால் டிரம்ப் – ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு எந்தவிதமான தீர்வும் எட்டப்படாமல் பாதியில் நின்றது.

அதேவேளையில், அமெரிக்க தொலைக்காட்சியான ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில் அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால் ரஷ்யாவை தங்களால் சமாளிக்க முடியாது என்று கூறினார்.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.