40 வயதிற்குட்பட்ட இளம் கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடல், கல்வித்துறை வட்டாரங்களில் சர்வதேச அங்கீகாரத்திற்காக நோபல் பரிசுகளுக்குச் சமமாகக் கருதப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச கணிதவியலாளர் மாநாடு துவங்கும் முன் கணித துறையில் சிறந்து விளங்கும் நான்கு கணிதவியலாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி-யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான ஃபீல்ட்ஸ் மெடல் வென்ற நான்கு பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
உக்ரைனைச் சேர்ந்த மரினா வியாசோவ்ஸ்கா, பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் மேனார்ட், கொரிய வம்சாவழியில் வந்த அமெரிக்கர் ஜூன் ஹூ மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹ்யூகோ டுமினில்-கோபின் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான சர்வதேச கணிதவியலாளர் மாநாடு ரஷ்யாவில் இன்று துவங்க இருந்த நிலையில், உக்ரைன் மீதான போர் காரணமாக பின்லாந்துக்கு மாற்றப்பட்டதுடன் இணையவழியாக மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மரினா வியாசோவ்ஸ்கா, ஹ்யூகோ டுமினில்-கோபின் இருவரும் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
உக்ரேனிய கணிதவியலாளரான மெரினா வியாசோவ்ஸ்கா, புகழ்பெற்ற பீல்ட்ஸ் பதக்கம் வென்ற இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2014 ம் ஆண்டு ஈரானைச் சேர்ந்த கணிதவியலாளர் மர்யம் மிர்சாகனி இந்த பதக்கத்தை வென்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக்ஷய் வெங்கடேஷ் மற்றும் மஞ்சுல் பார்கவா ஆகியோர் முறையே 2018 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பீல்ட்ஸ் பதக்கம் வென்றுள்ளார்கள்.