டெல்லி: உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளுக்காக சென்ற மாணவர்கள், படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு இந்தியா திரும்பி உள்ளனர். இவா்களில் பலா், உக்ரைனில் மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில் நாடு திரும்பியதால், அவா்களால் படிப்பை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடருவதால், மற்ற மாணவா்களும் மீண்டும் உக்ரைன் சென்று படிப்பைத் தொடர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சில கல்லூரிகள் ஆன்லைன் மூலம் கல்வியை தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரிட்டர் மருத்துவ மாணவர்களுக்கு உதவி செய்யப்படும் என ஏற்கனவே மத்தியஅரசு கூறிய நிலையில், இன்று பாராளுமன்றத்திலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவா்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராணா சந்தீப் பூஸா மற்றும் சிலா் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்களது மனுவில், இந்தியாவில் படிப்பைத் தொடா்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், இந்திய கல்வித் திட்டத்தில் அவா்களை சோ்த்துக்கொள்ள ஏதுவாக, மருத்துவ பாட சமநிலை தொடா்பு திட்டத்தை வகுத்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் தனிமனித சுதந்திரம் மற்றும் வாழ்வுக்கான பாதுகாப்புக்கான அடிப்படை உரிமை அளிக்கிறது. அதனடிப்படையில், இந்த மாணவா்கள் இந்தியாவில் படிப்பைத் தொடரும் வகையில் சோ்க்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுத்தப்பட்டுள்ளது.