கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய தூதரகம், எல்லை நாடுகளுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரெயில்இயக்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது. உக்ரைனில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், இதை பயன்படுத்தி மேற்கு எல்லை பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைனில் சுமார் 16ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க இந்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அண்டை நாடுகளிடமும் பேசி, இந்தியர்களை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து பக்கத்து நாடுகளான ருமேனியா, அங்கேரிக்கு செல்கிறார்கள். அங்கிருந்து இந்திய மாணவர்களை விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று மத்திய அமைச்சர்களையும் அண்டை நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே சிறப்பு விமானங்களை இயங்ககி அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வரும் நிலையில், மேலும் விமானங்களை இயக்கி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து எல்லைப்பகுதிகளுக்கு செல்வதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் அந்த ரெயிலில் மேற்கு பகுதியை நோக்கி செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
கீவ்வில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் ரஷியா ராணுவமும், உக்ரைன் மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து தலைநகர் கியேவில் உள்ள இந்திய குடிமக்களை ரயிலில் மேற்கு நோக்கிச் செல்லுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது