டெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இந்தியா நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. அதுபோல உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதில் அதிக அக்கறை எடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை இன்று 6வது நாளாக தொடர்கிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ரஷ்யா போரை நிறுத்தி விட்டு, உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. மேலும், உக்ரைன் அதிபர் நேட்டோ நாடுகளுக்கான அமைப்பிலும் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நிவாரண உதவிகள் கிடைக்காமல் சிக்கி தவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோல, அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களும், தங்களை உடனே மீட்டுச்செல்லுங்கள் என தொடர்ந்து இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே 9 சிறப்பு விமானங்கள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அண்டை நாடுகள் வழியாக மீட்டுள்ள நிலையில், மற்றவர்களையும் மீட்கும் பணியில் இந்திய தூதரகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் 4 பேர் செல்கின்றனர்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்து உள்ளதால், தூதரகம் வழிகாட்டுதலின்படி, அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள், அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விரைந்த வண்ணம் உள்ளனர். அதேசமயம், பல்வேறு மாணவர்கள், சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உக்ரைன் நிலவரம், இந்தியர்களை விரைவாக மீட்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் எல்லையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலையை சமாளிக்க உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று அனுப்பப்படும் என்றும் அண்டை நாடுகள், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியா உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து, உக்ரைனுக்கு இந்தியா முதல்முறையாக உதவிகரம் நீட்டியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும் என்றார்.
இதுவரை உக்ரைனிலிருந்து 8,000 இந்தியர்கள் வெளியேறி உள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 3 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதே இந்திய அரசின் நோக்கம். இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.