ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்கு இங்கிலாந்தின் ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று திடீரென உக்ரைன் தலைநகர் கிவ் சென்றார்.

இங்கிலாந்தில் உள்ள உக்ரேனிய தூதரகம், அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

பிப்ரவரி 24 ரஷ்யப் படையெடுப்புக்குப் பின் காக்கி உடைக்கு மாறிய ஜெலன்ஸ்கி-யுடன் போரிஸ் ஜான்சன் சந்திப்பதையும், பேச்சுவார்த்தை நடத்தும் படங்களையும் அதில் பதிவிட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமரின் இந்த வருகை குறித்து போர் நடைபெறும் உக்ரனை விட்டு வெளியேறும் வரை ரகசியமாக வைத்திருக்க பிரிட்டன் அதிகாரிகள் கூறியிருந்தனர். இருந்தபோதும், ஜெலன்ஸ்கி உடன் போரிஸ் ஜான்சன் இருக்கும் புகைப்படத்தை தவறுதலாக முன்னரே பதிவிட்ட உக்ரைன் தூதரகம் அதில் ‘சர்ப்ரைஸ்’ என்றும் பதிவிட்டிருந்தது.

ரகசிய இடத்தில் நடைபெற்ற ஜான்சன் – ஜெலன்ஸ்கி சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் இருவரும் கிவ் நகர வீதிகளில் பலத்த பாதுகாப்புடன் சென்று பொதுமக்களைச் சந்தித்துப் பேசியதோடு அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பின் கிவ் செல்லும் முதல் G7 நாடுகளின் தலைவர் போரிஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.