டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இரண்டு முறை அவரது இந்திய பயணம் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா-இங்கிலாந்து இடையேயான  வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கும் போரிஸ் ஜான்சனுக்கும்  இடையே நடைபெற்ற தொலைபேசி அழைப்பின்போது ஒரு நேரில் சந்திப்பு விவாதிக்கப்பட்டது.  அப்போது, இரு தலைவர்களும்,  இந்தியா மற்றும் இங்கிலாந்தின் வலுவான மற்றும் வளமான உறவை வரவேற்றனர், மேலும் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் வணிக உறவுகளை தொடர்ந்து கட்டியெழுப்ப ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் விரைவில் நேரில் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்,  டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் , பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியாவிற்கு வருவதற்கு “மிகவும் ஆர்வமாக” இருப்பதாகவும், மார்ச் 22ந்தேதி போரிஸ் இந்தியா செல்வார், இருந்தாலும், உறுதியான திட்டங்கள் இன்னும் முழுமையாக வரையப்படவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது  போரிஸ் ஜான்சன், இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தரஇருப்பதாக தகவல் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.