டில்லி

நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரி பிரிட்டன் அரசு உள்துறை செயலர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நிரவ் மோடி சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து நாட்டை விட்டு குடும்பம் மற்றும் பங்குதாரருடன் தப்பி ஓடி விட்டார். அவரை சிபிஐ உலகெங்கும் தேடி வருகிறது. இந்தியாவின் கோரிக்கைப்படி இண்டர்போல் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அனைத்து நாடுகளுக்கும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தி டெலிகிராஃப் அளித்த செய்தியில் லண்டன் நகரில் நிரவ் மோடி ஒரு வசதியான குடியிருப்பில் வசித்து வருவதாகவும் அவர் அங்கு வைர வியாபாரம் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியிட்டன. அத்துடன் அவர் தற்போது வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதையும் அந்த செய்திகள் தெரிவித்தன. இந்த செய்தி இந்திய ஊடகங்களிலும் வெளியானதில் நாடே பரபரப்பில் ஆழ்ந்தது.

இது குறித்துஇந்திய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், “பிரிட்டன் அரசுக்கு இந்தியா நிரவ் மோடி குறித்த அனைத்து தகவல்களையும் அளித்துள்ளது. அதை ஒட்டி பிரிட்டன் அரசு உள்துறை செயலர் சலித் ஜாவித் அந்நாட்டு நீதிமன்றத்தில் நிரவ் மோடியை நாடு கடத்த மனு ஒன்றை அளித்துள்ளார். அடுத்த கட்டமாக இந்த மனு மீது விசாரணை நடத்தி நீதிமன்ற உத்தரவுப்படி நிரவ் மோடி நாடு கடத்தப்படுவார்.

இந்த வழக்கில் இந்திய அரசின் சார்பாக வாதாட வழக்கறிஞர்களை நியமிக்க விரைவில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குழுவினர் லண்டன் செல்ல உள்ளனர். அத்துடன் அவர்கள் ஏற்கனவே மற்றொரு வங்கி மோசடி குற்றவாளி விஜய் மல்லையாவையும் இந்தியா கொண்டு வர முயற்சி செய்வார்கள். பிரிட்டன் அரசு இந்தியாவுக்கு இந்த விவகாரங்களில் ஆதரவாகவே நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.