லண்டன்:

118 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாட்டர் கலர் பெயின்ட் ஓவியம் ஓன்றை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் அன்டார்டிகா குடிலில் இருந்து கண்டுபிடித்துள்ளார்.

இறந்த பறவை ஒன்று ஓவியமாக வரையப்பட்டுள்ளது. அதில் 1899 மரம் கொடி என்று அந்த ஓவியத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. 1912ம் ஆண்டு தென் துருவ ஸ்காட் பயணத்தின் போது நோய் தாக்குதலால் இறந்த எட்வர்ட் வில்சனின் ஓவியம் இது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பயணம் 1910 மற்றும் 1913ம் ஆண்டுகள் இடையில் ஐக்கிய பேரரசின் ராபர்ட் பல்கான் ஸ்காட் தலைமையில் இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ அன்டார்டிகா பயணமாக மேற்கொள்ளப்பட்டது. நார்வே பயணிகள் சார்பில் அண்டார்டிகாவில் அமைக்கப்பட்ட குடிலில் காகிதங்களால் சுற்றப்பட்டு பென்குவின் சானத்தை கொண்டு மொழுவப்பட்டு இருந்த நிலையில் ஓவியம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தை கண்டெடுத்த அண்டார்டிகாவின் பாரம்பரிய அறக்கட்டளையின் காகித பாதுகாவலர் ஜோஸ்பின் பெர்க்மார்க் ஜிமினென்ஸ் என்பவர் கூறுகையில், ‘‘இந்த அழகான ஓவியத்தை நான் கண் டுபிடித்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தேன். பின்னர் அந்த ஓவியத்தை நான் வெளியில் எடுத்து பார்த்தேன். அதை பார்ப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. அதில் இருந்த நிறங்கள், உயிரோட்டம் ஆகியவை அழகான ஒரு வேலைப்பாடாக இருந்தது’’ என்றார்.

இந்த ஓவியத்தை அவர் கடந்த ஆண்டே கண்டுபிடித்துவிட்டாலும், அதை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தார். இதேபோல் மேலும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கலை அம்சங்கங்களை நார்வே குடில்களில் இருந்து கண்டுபிடித்துள்ளார். இவை 1899 ஆண்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.