லண்டன்: சிங்கிள் ஷாட் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து, மெக்சிகோ நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, அந்த நாடுகளில் சிக்கில் டோஸ் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றின் 2வது அலை உலக நாடுகளை தீவிரமாக தாக்கி வருகிறது. இருந்தாலும், தடுப்பூசிகளை போட்டு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தற்போதைய நிலையில், பல நாடுகளின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பிரபல மருந்து பொருட்கள் தயாரிப்பு ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசி தயாரித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தடுப்பூசி ஒரே ஒரு டோஸ் மட்டும் போட்டாலே போதுமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற தடுப்பூசிகள் 2 டோஸ்களாக செலுத்தப்படும் நிலையில், ஜான்சன் நிறுவன தடுப்பூசி ஒரே டோசாக ‘செலுத்தப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசியை அவசர கால பயன்படுத்த இங்கிலாந்து அரசு இன்று ஒப்புதல் அளித்ததாக மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.எச்.ஆர்.ஏ) அறிவித்தது. இதனையடுத்து 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிக்கு பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது நாட்டின் மோசமான கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்க உதவும் நான்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை இப்போது நாங்கள் பெற்றுள்ளோம்” என்று இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் ஆய்வக முடிவுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதால், அதனை அவசரகால பயன்பாட்டிற்கு பொதுமக்களுக்கு செலுத்தலாம் என மெக்சிகோ அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே மெக்சிகோவில் பைசர், கோவேக்சின், அஸ்ட்ரா செனகா உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசி செலுத்த தொடங்கியதன் பின், அங்கு கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.