நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு.. வாருங்கள் வெட்கப்படுவோம்..

மது போதையில் பள்ளிக்கு வந்ததைக் கண்டித்த ஆசிரியரை, மது பாட்டிலாலேயே குத்தி இருக்கின்றனர் 12-ம் வகுப்பு மாணவர்கள்.
குடித்ததே தப்பு. இதில் மது பாட்டிலை பையில் போட்டு பள்ளிக்கே கொண்டு வந்திருக்கின்றனர் மாணவர்கள். இதெல்லாம் நடந்திருப்பது நம்ம சிவகாசிக்கு பக்கத்தில் உள்ள திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில்..
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளியில்தான் ஒரு ஆசிரியரை மாணவர்கள் அறிவாளால் வெட்டினார்கள் என்பது நெற்றி, தலை, தாடை என பல இடங்களில் ப்படு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார் 47 வயது பள்ளி ஆசிரியரான சண்முகசுந்தரம்.
“லேட்டா வந்த உங்களிடம் ட்ரிங்ஸ் வாடை அடிக்கிறதே, வாங்க ஹெட் மாஸ்டர் ரூமுக்கு” என்று சண்முகசுந்தரம் அழைத்தபோது தான் மாணவர்கள் இப்படி வெறி கொண்டு அவரை தாக்கி இருக்கின்றனர். இப்போது மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளியில் அதுவும் ஒரு ஆண் ஆசிரியரிடமே இவ்வளவு திமிரான மனப்பான்மை மாணவர்களுக்கு முளைக்கிறது என்றால் மாணவி களிடம் எப்படி இருக்கும்? மாணவிகள் எந்த மாதிரி அச்சமான சூழ்நிலையில் படித்துக் கொண்டிருப்பார்க்கள்? சுதந்திரமான மனநிலையில் நடமாட முடியும் என்ற நிலையில் மாணவிகள் இருக்கின்றனரா?
சமூக நலத்துறை உட்பட அரசின் எந்த தரப்புதான் அக்கறையோடு ஆராய போகிறது? மீடியாக்கள்தான் விரிவாக அலசப் போகின்றன?
திருத்தங்கல் பள்ளி சம்பவத்தில் சம்பவத்தில் இரண்டு விஷயங்களை முக்கியமாக பார்க்க வேண்டும்.
ஒன்று, பெற்றோர் தங்கள் பிள்ளை மீது எவ்வளவு தூரம் கண்காணிப்பை செலுத்துகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது. பெண் பிள்ளைகள் விஷயத்தில் ஏற்படும் பதற்றமான மனநிலையில், 10% கூட ஆண்கள் பிள்ளை விஷயத்தில் பெற்றோருக்கு ஏற்படுவதில்லை.
மிரட்டி கேட்கப்போனால் ஏதாவது செய்து கொண்டு விடுவானோ என்ற பயம். அதிலும் இப்போது பெரும்பாலான வீடுகளில் இருப்பது போல் ஒரே ஒரு பையனாக இருந்துவிட்டால் பெற்றோருக்கான தயக்கம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
அடுத்த முக்கியமான விஷயம், பள்ளி மாணவர்களுக்கு எப்படி மது கிடைத்தது என்பதுதான். மாணவர்களே டாஸ்மாக்குக்கு சென்று வாங்கி இருக்க வேண்டும். அப்படி அவர்களுக்கு விற்கப்பட்டிருந்தால் அது டாஸ்மாக் ஊழியர் தரப்பில் பெரும் குற்றம். கைது செய்து சிறையில் அடைக்கலாம். அடைக்க வேண்டும்.

பணத்துக்கு ஆசைப்பட்டு வேறு யாராவது வாங்கி வந்து மாணவர்களுக்கு கொடுத்திருந்தால் அது குற்ற உடந்தை. ஈவு இரக்கம் பார்க்காமல் அவர்களைத்தான் முதலில் உள்ளே பிடித்து போட வேண்டும். ஏதோ பாட்டில் வாங்கி வந்து கொடுத்தால் 20, 30 ரூபாய் கிடைக்கிறதே என்று எடுத்துக் கொள்ள வேண்டிய சர்வ சாதாரணமான சமாச்சாரம் அல்ல. எதிர்கால தலைமுறையிரையே நாசம் படு பயங்கரமான செயல்கள்.
இந்த கோணங்களில் போலீசாரின் விசாரணை போனால் தமிழ்நாட்டில் எந்த டாஸ்மாக்கிலும் மாணவர்களுக்கு சரக்கு விற்க முடியாது. மாணவர்களுக்கு சரக்கை எவனும் வாங்கியும் கொடுக்க மாட்டான். ஆனால் பாருங்கள் தமிழக அரசின் காவல் மற்றும் நிர்வாக இயந்திரங்கள் இந்த ரூட்டை எல்லாம் கண்டுக்கவே கண்டுக்காது.
பதட்டமான சம்பவம் நடந்தால் அந்த நேரத்துக்கு சில விஷயங்களை செய்து மக்களின் ஆவேசத்தை தணிய வைத்துவிட்டு பாய் வாய் விரித்து குறட்டை விட்டு தூங்கப் போய் விடுவார்கள் .. எல்லாவற்றையும் விட சமூகத்தை நாசப்படுத்தும் விஷயங்களில் ஆணிவேரையே அழிக்கும் அககறையும் திறமையும் ஆட்சியாளர்களுக்கு கிடையாது.
இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மட்டும் இதற்கு விதிவிலக்காகவா இருக்க முடியும்?
Patrikai.com official YouTube Channel