சென்னை: ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில்  தேர்வு நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு அட்டவணையை மாற்றா விட்டால் நாடெங்கும் போராட்டம் நடைபெறும்  திமுக மாணவர் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் திருநாளை அவமதிக்கும் வகையில் யுஜிசி-நெட் தேர்வு  2025, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில்  தேர்வு நடைபெறும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கலன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள  யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஒன்றிய பாஜ அரசின் கீழ் இயங்கும் தேர்வு முகமை அறிவித்துள்ள “யுஜிசி – நெட்” தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 30 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும்.

ஒன்றிய பாஜ அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பட்டயக் கணக்காளர் தேர்வு கூட பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டது. பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அறிவிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழர்களின் ஒற்றுமைக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாக விளங்கும் பெருவிழா பொங்கல். “நாம் காணும் பொங்கல் விழா, உலகெங்கிலும் பிறந்து மொழி பயின்று வாழும் மனித குலத்துக்கே பொதுவான விழா.

பசிக்கின்ற நல் வயிறு படைத்துள்ள மனித இனம் முழுவதுக்கும் சொந்தமான உலகப்பெருவிழா என்று கலைஞரால் போற்றப்படும் உலகப் பெருவிழாவினை ஒன்றிய பாஜ அரசு தொடர்ச்சியாக அவமரியாதை செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அறிவிக்கப்பட்ட “யுஜிசி – நெட்” தேர்வு அட்டவணையை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆலோசனைகளை பெற்று திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.