டெல்லி:  கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில்  சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும்  என்று யுஜிசி  உத்தரவிட்டுள்ளது.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு,  நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை  கண்காணித்து, அங்கு தேவையான கட்டிடங்கள், பாடப்பிரிவுகள், ஆசிரியர்கள்,  மாணாக்கர்களின் கல்விக்கான வசதிகள், பாதுகாப்பு,  தரக்கட்டுப்பாடு போன்றவைற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மத்திய மாநில அரசு வழங்கும் நிதி மானியங்களையும் கண்காணித்து வருகிறது. மேலும் கல்வி சம்பந்தமாக  மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், சமீப காலமாக அதிரிகத்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து மாணாக்கர்கள் தெரிந்துகொள்ளும் வகையில்,கல்லூரிகளில் அதுதொடர்பான பாடப்பிரிவுகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி  கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை  படிப்புகளில், சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது

இதுதொடர்பாக யுஜிசி அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில், இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளது மேலும், இந்த பாடத்திட்டமானது அதிக விழிப்புணர்வு, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.