சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு எதிரான தூக்கு தண்டனைக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர். அவரது மனைவி கவுசல்யா மீது 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சங்கர் பலியானார். வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
வழக்கிலிருந்து கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் பாண்டித்துரை, கல்லூரி மாணவன் பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அதே நேரத்தில், வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க கோரியும் போலீசார் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.