சென்னை
விவசாய சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 3500 மீது ஊரடங்கு விதிமீறல் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சமீபத்தில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள விவசாய திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. அவ்வகையில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் திமுகவின் தோழமைக் கட்சியினரும் திரளாகக் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் உட்பட சுமார் 140 பேர்மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது சட்ட விரோதமாகக் கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறுதல், தொற்றுநோயைப் பரப்பும் வகையில் நடந்து கொள்ளுதல், ஊரடங்கு விதியை மீறுதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதைப் போல் கொருக்குப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கந்தன் சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உட்படச் சென்னை முழுவதும் 25 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
மொத்தம் 3500 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.