சென்னை
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டியது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரும் 21 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தைத் தமிழக அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். வரும் 20 ஆம் தேதி இந்த சுடர் ஓட்டம் பெத்தநாயக்கன் பாளையத்துக்குச் சென்றடைகிறது. அதை சேலம் மாநாட்டு திடல் முன்பு மாநாட்டுச் சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்க உள்ளனர்.
சுடர் ஓட்டத்தைத் தொடங்கிவைத்த உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம் அதை அரசியலாக பார்க்கக்கூடாது” என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் அதற்கு,
‘அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம். திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது என்று கலைஞர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். திமுக ராமர் கோவில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ எதிரி அல்ல.
எங்களுக்கு அங்கே கோயில் வருவது பிரச்சினை கிடையாது. அங்கே இருந்த பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் “
என்று பதில் அளித்துள்ளார்.