டெல்லி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேசிய பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. சனாதனம் குறித்த அவரது பேச்சு அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானதா என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திராவிடர் கழகம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, சனாதனம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்று இருந்தார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சரே பங்கேற்றதற்கும், சனாதன தர்மத்தை ஒழிப்பதாக உதயநிதி பேசியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவரது பேச்சு அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது, சிபிஐ விசாரிக்க வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெகன்நாதன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழக அரசும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று வாய்மொழியாக கூறியதுடன், அரசியல் சாசனத்திற்கு எதிரானதா என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது.