குன்னூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சிபிசிஐடி போலீசார் கூடுதல் அவகாசம் கேட்டதால், விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் அவரது மறைவுக்கு பிறகு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த விவகாரத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர்மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக அரசு, கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு கடந்த இரு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை குழுவினர்,.ஜெயலலிதாவின் கார் டிரைவர் எடப்பாடியை சேர்ந்த கனகராஜ் விபத்தில் இறந்தது தொடர்பாக மீண்டும் விசாரணை முடுக்கி விட்டுள்ளனர். கனகராஜ், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ஆத்தூர் அருகே புறவழிச்சாலையில் மர்மமாக இறந்தார். இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்தனர். தற்போது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீலகிரி, சேலம் மாவட்டத்தில் கனகராஜ் இறந்தது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ஆத்தூர் புறவழிச்சாலையை இணைக்கும் கடைவீதி, கோட்டை, உப்பு ஓடை வழியே செல்லும் சாலையில் வேகத்தடைகள் எத்தனை உள்ளன. வேகத்தடைகள் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டதா? வேகத்தடை அமைத்தபோது பணிபுரிந்த நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் உள்பட அலுவலர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தவர்கள் குறித்தும் விசாரித்தனர்.
மேலும் கனகராஜ் இறந்ததாக கூறப்பட்ட முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் ஏன் வேகத்தடை அமைக்கப்பட்டது என்பது, அதற்கான ஆவணங்கள் நகராட்சியில் உள்ளதா ? என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து புறவழிச்சாலை இணைப்பு சாலையில் உள்ள வேகத்தடை தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டனர். வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோடநாடு வழக்கு இன்று மீண்டும் உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 8ந்தேதி ஒத்தி வைத்தார்.