டெல்லி: வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட்  பணத்தை பெறும்வ கையில்,  புதிய இணையதளத்தை ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளது. உரிமை கோரப்படாத FDகள், சேமிப்பு கணக்குகளுக்கான UDGAM போர்டலில் (உத்கம்), பரிவர்த்தனையில் உள்ள  30 வங்கிகள்  பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய தகவலின்படி பிப்ரவரி 2023 வரை, ரிசர்வ் வங்கியிடம் பொதுத்துறை வங்கிகள் ஒப்படைத்துள்ள உரிமை கோரப்படாத டெபாசிட் தொகை 35 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவித்துள்ளது. இந்த பணத்தை பெறும் வகையில்   இணைய போர்ட்டலை அறிமுகப்படுத்தப்படும் என அப்போது அறிவித்தது.

பொதுவாக  இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒரு கணக்கிலிருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால், அந்த கணக்கு செயலற்றதாகிவிடும் (Inactive). அதாவது வங்கியில் இருந்து பணம் எடுக்கவோ, செலுத்தாமலோ இருந்தால் அந்த கணக்கை செயல்பாடு இல்லாத கணக்கு என வங்கி கருதுகிறது. அதிலுள்ள பணத்தை திரும்பப் பெற ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற சரிபார்ப்பு ஆவணங்களை வங்கியில் சமர்பித்தால் கணக்கு ‘ஆக்டிவேட்’ ஆகி உங்கள் கைக்கு பணம் திரும்ப வந்துவிடும்.

ஆனால், எதிர்பாராதவிதமாக பணத்தை சேமித்தவர்கள் உயிரிழந்தாலோ, வங்கி கணக்கு விவரத்தை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இறந்தவர்கள், காசோலை புத்தகம், வங்கி புத்தகத்தை தொலைத்து கணக்கை மறந்தவர்கள் மற்றும்  பல காரணங்களால், அந்த பணத்தை பெற முயற்சிக்கவில்லை என்றால்,   அது உரிமை கோரப்படாத வைப்புத்தொகையாக (unclaimed deposit) மாறும்.

உரிமை கோரப்படாத டெபாசிட்களின் விவரங்களையும் அவற்றில் உள்ள மொத்தத் தொகையையும் நிதியாண்டின் இறுதியில் வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) அளிக்க வேண்டும். அதன் பிறகு, இந்த வைப்புத்தொகை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் ‘டிபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு’ (DEAF) செல்லும். அதன்படி, பல பிரிவுகளில் உரிமை கோரப்படாமல் வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் முடங்கி உள்ளது. இந்த உரிமை கோரப்படாத டெபாசிட்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.  இவற்றை உரியவரிடம் சேர்க்கும் முயற்சியாக UDGAM என்ற இணையத்தளத்தை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு (2022) 48ஆயிரத்து 262கோடி ரூபாய் உரிமைக் கோரப்படாமல் இருந்ததாக கூறி பொதுத்துறை வங்கிகள் அந்த பணத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொடுத்திருந்தது என இந்திய நிதித்துறையின் இணையமைச்சர் பகவத் காரத் தெரிவித்தார்.  பின்னர், ஏப்ரல் 06, 2023 தேதியிட்ட வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைகள் குறித்த அறிக்கையின் ஒரு பகுதியாக, உரிமை கோரப்படாத வைப்புகளைத் தேடுவதற்கான மையப்படுத்தப்பட்ட இணைய போர்ட்டலை மேம்படுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதன்படி, உரிமை கேரப்படாத பணத்தை பயனர்கள் மற்றும் பயனர்களின் உறவினர்கள் பெறும் வகையில், இந்திய ரிசர்வ் புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது. அதன்படி,  UDGAM போர்டல் மூலம், பொது மக்கள் தங்கள் உரிமை கோரப்படாத டெபாசிட்களை ஒரே இடத்தில் தேடுவதை எளிதாக்கும் வகையில் தொடங்கப்பட்டு உள்ளது.

இணைய தளத்தின் துவக்கமானது, பயனர்கள் தங்கள் கோரப்படாத டெபாசிட்கள்/கணக்குகளை அடையாளம் காணவும், டெபாசிட் தொகையைப் பெறவும் அல்லது அவர்களது டெபாசிட் கணக்குகளை அந்தந்த வங்கிகளில் செயல்படுத்தவும் உதவும். ரிசர்வ் பேங்க் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (ரீபிட்), இந்தியன் ஃபைனான்சியல் டெக்னாலஜி & அலிட் சர்வீசஸ் (IFTAS) மற்றும் பங்குபெறும் வங்கிகள் ஆகியவை போர்ட்டலை உருவாக்குவதற்கு ஒத்துழைத்துள்ளன. இந்த திட்டத்தில் 30 வங்கிகள் இணைந்துள்ளது.  பயனர்கள் தற்போது போர்ட்டலில் உள்ள வங்கிகள் தொடர்பான அவர்களின் கோரப்படாத டெபாசிட்களின் விவரங்களை இந்த இணையதளம்  அணுக முடியும். போர்ட்டலில் மீதமுள்ள வங்கிகளுக்கான தேடல் வசதி அக்டோபர் 15, 2023க்குள் படிப்படியாக சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுமார்  10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இயக்கப்படாத கைவிடப்பட்ட கணக்குகளில் இருந்த தொகையை ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் ஒப்படைத்துள்ளன. முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ள இந்த தொகையை கணக்கை கைவிட்டவர்கள் வாரிசுதாரர்கள் பணத்தை திரும்பப்பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஆா்இபிஐடி), இந்திய நிதி தொழில்நுட்பம்-துணை சேவைகள் (ஐஎஃப்டிஏஎஸ்) மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் இணைந்து இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளன.