மும்பை: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.
ஏகப்பட்ட அரசியல் பரபரப்புகளுடன் சென்று கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநில அரசியல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.


குறைந்தபட்ச செயல்திட்டம், மற்ற கட்சிகளுடன்(காங், தேசியவாத காங்) இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா களம் இறங்கி இருக்கிறது.
அதற்காக, மும்பை புறநகரில் உள்ள ஓட்டலில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் பாலசாகேப் தோரத், மாணிக்ராவ் தாக்கரே, முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் ஆகியோருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.


இந்த ஆலோசனை 1 மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு செய்தியாளர்களுக்கு உத்தவ் தாக்கரே பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் போய் கொண்டிருக்கிறது.


விரைவில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது அறிவிக்கப்படும். சரியான நேரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார். பேச்சுவார்த்தை குறித்து பேசிய சிவசேனா எம்பி வினாயக் ராவுத், என்ன முடிவு என்பதை கட்சியின் மூத்த தலைவர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்றார்.