டெல்லி: பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்று விட்டதாக பிரபல பொருளாதார நிபுணர் அருண்குமார் கூறி இருக்கிறார்.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் உரையாற்றினார் பிரதமர் மோடி. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.


அவரின் இந்த பெரிய அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல மாதங்கள் மக்கள் பணம் இன்றி தவித்தனர். பலர் உயிரை இழந்தனர்.
இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்துவிடும், கள்ள ரூபாய் நோட்டுகள் நடமாட்டம் அழிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், இந்த திட்டம் படுதோல்வி என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கூறியது.


இந் நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றிருப்பதாக பிரபல பொருளாதார நிபுணரும், ஜவஹர்லால் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான அருண் குமார் கூறி இருக்கிறார். இவர் கருப்பு பணம் நடமாட்டம் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருபவர்.


அவர் மேலும் கூறி இருப்பதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அமைப்புசாரா துறை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கருப்பு பணம் மூலம் வருவாய் என்ற புதிய வழியை இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை உருவாக்கி இருக்கிறது.
சிலர் அவர்களின் பணத்தை எடுத்துச் செல்கின்றனர், பின்னர் புதியவையாக மாற்றுகின்றனர். அதன் மூலம், கருப்பு பணம் வேறு ஒரு ரூபத்தில் வருவாயாக மாறுகிறது.


எனது கருத்தின் படி, பொருளாதார மந்தநிலை 3 ஆண்டுகாலம் இருக்கும். ஆனால் அது கண்களுக்கு புலப்படாது. ஏன் என்றால் அமைப்புசார்ந்த துறைகளின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கிறது. ஆகவே, இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கிறது என்று கூறுகிறார்கள்.
ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அமைப்புசாரா துறைகளால், அமைப்புசார்ந்த துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே நாட்டின் பொருளாதாரம் சரிவு என்று விளைவை கொடுத்து இருக்கிறது.


அமைப்புசாரா துறைகள் தான் இன்றும் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய அம்சமாக இருக்கிறது. மேல்நோக்கி இருக்க வேண்டிய வளர்ச்சி விகிதம், எதிர்மறையான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. ஆக வளர்ச்சி விகிதம் என்பது 4.5%, 5% அல்லது 5.8% அல்ல. அது -1 ஆக இருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை தருணத்தில் அமைப்புசாரா துறைகளின் வளர்ச்சி எதிர்மறையாக இருந்தது.

பூஜ்யமாகவும் இருந்தது. அதுவே அமைப்பு சார்ந்த துறைகளை எடுத்துக் கொண்டால், ஒரு இறங்கு முகமாக உள்ளது.
இந்த இரு துறைகளையும் (அமைப்புசாரா, அமைப்புசார்ந்த) சேர்த்து எடுத்துக் கொண்டு கணக்கிடுவோம். அப்போது பார்த்தால் நாட்டின் பொருளாதாரம், 3 ஆண்டுகளாக மந்த நிலையில் தான் உள்ளது என்று கூறினார்.