மும்பை:
கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், முஸ்லீம்கள் அனைவரும் வீட்டிலேயே ஈத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிர மாநிலம்தான் கரோனாவில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,577 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,190 ஆக அதிகரித்துள்ளது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா இருந்து வருகிறது.

மத்திய அரசு ரயில்களை படிப்படியாக இயக்குவதிலும், இன்று உள்நாட்டு விமானச் சேவையைத் தொடங்குவதிலும் மகாராஷ்டிர அரசுக்கு விருப்பமில்லை. அதிருப்தியுடனே இருந்து வருகிறது.

உள்நாட்டு விமானச் சேவை தொடங்குவது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் விலாஷ் தேஷ்முக், “ உள்நாட்டு விமானச் சேவையை சிவப்பு மண்டலத்தில் தொடங்க அரசு எடுத்துள்ள முடிவு மோசமான ஆலோசனை” என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று காணொலி மூலம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கை திடீரென மத்திய அரசு அறிவித்தது தவறான முடிவு. இப்போது அதை முழுமையாக ஒரே நேரத்தில் நீக்கினாலும் அதும் அதற்கு இணையான தவறுதான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், உடனடியாக மொத்தமாக ஊரடங்கை நீக்கினால் மக்களுக்கு இரட்டிப்பு மோசமான அனுபவங்களைக் கொடுத்தது போன்று இருக்கும். அடுத்து பருவமழை வேறு வருவதால், லாக்டவுனை நீக்குவதில் இன்னும் கூடுதல் கவனத்துடன், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

மத்திய அரசு சிறிய உதவி செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் எந்தவிதமான அரசியல் சேற்றை வாரி இறைக்காமல் உதவி செய்துள்ளது. இதுவரை மகாராஷ்டிர அரசு எந்தவிதமான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் மத்திய அரசிடம் இருந்து பெறவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்ப இயக்கப்படும் ஷ்ராமிக் ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் உரிய பங்கை மத்திய அரசு இன்னும் எங்களிடம் இருந்து பெறவில்லை. மருந்துகள், மாத்திரைகளில் சிறிது பற்றாக்குறை நிலவுகிறது. முன்பு பிபிஇ கவச உடைகள் மற்றும் பிற விஷயங்களில்தான் தட்டுப்பாடு இருந்துவந்தது என்றும் அவர் தெரிவித்தார்.