மும்பை: ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும், அந்த அணிக்கே வில் அம்பு சின்னம் உரிமையுடையது எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது கட்சியை தொடங்கிய உத்தவ்தாக்கரே குடும்பத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீவிர இந்துத்வா மற்றும் மண்ணின் மைந்தர் கொள்கை கொண்டது சிவசேனா. இதையே தாரக மந்திரமாக கொண்டு, சிவசேனா கட்சியை அதன் தலைவர் மறைந்த பால்தாக்கரே தொடங்கி, மராட்டிய மாநிலத்தின் தவிர்க்க முடியாத கட்சியாக கொண்டு வந்தார். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அக்கட்சி பா.ஜனதாவுடன் நட்பு பாராட்டி வந்தது. இதனால் கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வந்தது. இந்த கூட்டணி அரசுக்கு மராட்டிய மாநில மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆனால், கடநத் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர காத்திருந்த நிலையில், முதலமைச்சர் பதவியை தங்களுக்கு 2½ ஆண்டு காலம் விட்டு தர வேண்டும் என பா.ஜனதாவை உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா வற்புறுத்தியது. பதவிக்கு ஆசைப்படாத பால்தாக்கரே குடும்பத்தினர், அதற்கு ஆசைப்பட்டு பாஜவுக்கு எதிராக களமாடியது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வந்தது.
எந்த கட்சிக்கு எதிராக பல ஆண்டுகாலமாக அரசியல் செய்து வந்த சிவசேனா, ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்பட்ட தலைவர் உத்தவ் தாக்கரே, தனது கொள்கைக்கு முரண்பட்ட, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தது.
2½ ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி தேரை நகர்த்தி வந்த நிலையில், அவருக்கு எதிராக சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கியதால் உத்தவ்தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவியில் இருந்து ஆட்சி செய்து வருகிறார்.
இதனிடையே உத்தவ்தாக்கரே அணியில் இருந்த பெரும்பாலான 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்களும், பெரும்பான்மையான சிவசேனா எம்.பி.க்களும் ஷிண்டே அணிக்கு தாவியதால், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று அறிவிப்பதோடு, கட்சியின் வில் – அம்பு சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி, ஷிண்டே அணியினர் தேர்தல் கமிஷனில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதனை எதிர்த்து உத்தவ் அணியினரும் தேர்தல் கமிஷனில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா. அந்த அணிக்குத்தான் வில் அம்பு சின்னம் உரியது என அறிவித்துள்ளது.
மேலும், உத்தவ் தாக்கரே அணி, இடைக்கால தீர்வாக வழங்கப்பட்ட உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற கட்சிப் பெயரில் தொடர்ந்து இயங்கலாம். அதேபோல இடைக்கால தீர்வாக அந்த அணிக்கு வழங்கப்பட்ட தீப்பந்தம் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.
இந்த முடிவு, உத்தவ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தாக்கரே குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. மக்களின் கருத்துக்கு எதிராக, ஆட்சி, அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு, தான் தொடங்கிய கட்சியையே இழக்கும் நிலைக்கு இன்று உத்தவ்தாக்கரே தலைமையிலான அணி தள்ளப்பட்டுள்ளது.