மும்பை

காராஷ்டிராவின் அடுத்த முதல்வர் குறித்து பாஜக தலைவர்கள் பேசியதை ஒட்டி பாஜக அமைச்சர் அமித்ஷாவை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்திக்க உள்ளார்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவசேனா – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.   அதே கூட்டணி மீண்டும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலிலும் தொடர உள்ளது.   ஆனால் அந்த கூட்டணிக்குள் முதல்வர் பதவி குறித்த சர்ச்சை தொடங்கி உள்ளதால் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.   சிவசேனா மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் முதல்வர் பதவியை சரி சமமாக இரண்டரை ஆண்டுகளாக பங்கு போட சிவசேனா விரும்புகிறது.

இந்நிலையில் பாஜக தலைவர்களான கிரிஷ் மகாஜன் மற்றும் சந்திரகாந்த் பாடில் ஆகியோர் அடுத்த முதல்வர் தங்கள் கட்சியை சேர்ந்தவராக இருப்பார் என அடிக்கடி தெரிவித்து வருகின்றனர்.  அத்துடன் பாஜக ஒரு அண்ணன் நிலையில் உள்ளதால் தம்பியான சிவசேனாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனால் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார்.  அகமத் நகரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில், ”டிவியிலும் பத்திரிகைகளிலும் எந்தக் கட்சி முதல்வர் பதவியில் அமரும் என விவாதம் நடக்கின்றன.  நான் அது குறித்து கவலைப்படவில்லை.  முதல்வர் பதவிக்கு வர விரும்புவோர் முதலில் விவசாயிகள் குறைகளை நீக்க வேண்டும்.  அப்படி இல்லை எனில் விவசாயிகளின் கோபம் முதல்வர் நாற்காலியை சுட்டெரித்து விடும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இது குறித்து பேச பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.   இந்த சந்திப்பில் உத்தவ் தாக்கரே பாஜக தலைவர்களின் பேச்சுக்களை கட்டுப்படுத்த வேண்டும் என அமித்ஷாவை கேட்டுக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.