நடிகர் சுஷாந்த் மரணம் : உத்தவ் மகனை நோக்கி பாயும் தோட்டாக்கள்..

Must read

நடிகர் சுஷாந்த் மரணம் : உத்தவ் மகனை நோக்கி பாயும் தோட்டாக்கள்..
 
கொரோனா, ஊரடங்கு, கோழிக்கோடு விமான விபத்து, மூணாறு நிலச்சரிவு ஆகிய விஷயங்களைத் தாண்டி, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவம், ஊடகங்களில் இன்னும் பிரதானச் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேயை குறிவைத்து சில நாட்களாகத் தோட்டாக்கள் பாய்ச்சப்படுகின்றன.
பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயண் ரானே ’’சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார்’’ என கொளுத்திப்போட்டார்.
(ரானே, சிவசேனாவில் இருந்த போது, ஆதித்யா தாக்கரேயின் தாத்தா பால் தாக்கரே தான், அவரை முதல்வர் ஆக்கினார்)
 
ரானே கை நீட்டியது, ஆதித்யா தாக்கரேயை நோக்கி என்பதால், சுஷாந்த் மரண விவகாரத்தில் அதுவரை மவுனம் காத்து வந்த ஆதித்யா’’ எனக்கும், சுஷாந்த் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என மறுத்தார்.( ஆதித்யா, அந்த மாநில அமைச்சராகவும், சிவசேனா இளைஞர் அணித் தலைவராகவும் இருக்கிறார்) 
இப்போது நாராயண் ரானேயின் மகன் நிலேஷ், ‘’ சுஷாந்த் மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களில் ஆதித்யா பெயர் உள்ளது’’ என புதிய புயலைக் கிளப்பியுள்ளார்.
பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நிகில் ஆனந்த் ‘’ இந்த விவகாரம் குறித்து ஆதித்யாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களை எல்லாம் மறுத்துள்ள சிவசேனா  கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ராவத் ’’சுஷாந்த் விவகாரத்தில் ஆதித்யாவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. இந்த  பிரச்சினையில் ஆதித்யா பெயரை தேவையில்லாமல் ஊடகங்கள் இழுத்து விடுகின்றன.’’ என்று  குற்றம் சாட்டினார்..
‘’ஊடகங்கள் எந்த திசையை நோக்கிப் பயணப்படுகின்றன என்பதை அனைவரும் அறிவார்கள்’’ என்றும் சீறியுள்ளார், சஞ்சய் ராவத்.
-பா.பாரதி.

More articles

Latest article