உத்தவ் தாக்கரே பதவி..  அடாவடியில் கவர்னர்..

மகாராஷ்டிர முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரேயின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி தாக்கரே பதவி ஏற்றுக்கொண்டார்.

இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாத அவர், அடுத்த மாதம் 27 ஆம் தேதிக்குள் எம்.எல்.சி.யாக தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே, முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.

கொரோனாவால் அந்த மாநிலத்தில் நடக்க இருந்த எம்,எல்.சி. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி, தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமித்தால் மட்டுமே, அவர் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.

இருமுறை அந்த மாநில அமைச்சரவை ‘’ தாக்கரேவை எம்.எல்.சி.யாக நியமிக்க வேண்டும்’’ என்று பரிந்துரைத்தும், அதனை ஏற்க மறுத்து விட்டார், ஆளுநர்.

துணை முதல்-அமைச்சர் அஜித்பவார் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆளுநரை வலியுறுத்தியும், அவர்  பிடி கொடுக்க மறுத்து விட்டார்.

சாட்சிக்காரர் காலில் விழுவதை விட, சண்டைக்காரர் காலில் விழுவதே மேல்,என்ற முடிவுக்கு வந்துள்ள உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு , உதவி கேட்டுள்ளார்.

‘’ என்னை எம்.எல்.சி,யாக நியமிக்க ஆளுநரை வலியுறுத்த வேண்டும். இல்லை என்றால் நான் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டியது இருக்கும்’’ என்று தாக்கரே, மோடியிடம் உருகியுள்ளார்.

’’ஆகட்டும் பார்க்கலாம்’’ என்ற பதிலுடன் தொலைப்பேசி உரையாடலை முடித்துக்கொண்டார்,மோடி.

தாக்கரே குடுமி,இப்போது பிரதமர் கையில்.

 

– ஏழுமலை வெங்கடேசன்