மும்பை

காராஷ்டிர மாநில விவசாயிகள் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் வாங்கியுள்ள ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் அப்போது பாஜக் கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தாங்கள் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.  தற்போது கூட்டணி அரசில் இணைந்துள்ள தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்  என அறிவித்திருந்தன

பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் காங்கிரஸுடன் இணைந்து மகா விகாஸ் அகாதி என்னும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன.   இதற்கான குறைந்த பட்ச செயல் திட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் முடிவடைந்தது.

இத்தொடரின் கடைசி தினத்தன்று முதல்வர் உத்தவ் தாக்கரே, “மகாராஷ்டிர மாநில விவசாயிகள் வங்கியில் 2019, செப்டம்பர் 30-ம் தேதிவரை ரூ.2 லட்சம் வரை பெற்றிருக்கும் பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டத்துக்கு மகாத்மா ஜோதிராவ் பூலே கடன் தள்ளுபடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1.3 லட்சம் கோடி செலவாகும்.  அத்துடன், சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கும் சிறப்புத் திட்டமும் உள்ளது” எனத் தெரிவித்தார்.