ஜெய்ப்பூர்:  காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், பட்டப்பகலில் டெய்லர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுத்த கொலை செய்து, மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திய மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் உதய்பூர் கொலை வழக்கில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதாகவும், இது இரண்டு மதத்தினருக்கு இடையிலான சண்டை இல்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

 ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில், நேற்று (ஜூன் 29) கன்னையா என்ற டெய்லர், பயங்கரவாதிகளால், தலையை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கொலை தொடர்பாக பயங்கரவாதிகள் பகிரங்கமாக வெளியிட்ட காணொலியில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய நூபுர் சர்மாவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக இந்த கொலையை செய்துள்ளோம் என்றும், பிரதமர் மோடியையும் கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சம் உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வீடியோவை வெளியிட்ட  முகமது ரியாஸ் மற்றும் கௌஸ் முகமது ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பயங்கரவாத அமைப்புக்கு ஸ்லிப்பர் செல்லாக பணியாற்றி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்பு உள்ளதாக ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் ராஜேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை சம்பவம் இரண்டு மதத்தினருக்கு இடையேயான சண்டை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கௌஸ் முகமது, கடந்த 2014-15இல் கராச்சியில் 45 நாட்கள் பயங்கரவாத அமைப்புகளிடம் பயிற்சி எடுத்துள்ளார் என்றும், இதேபோல் அரபு நாடுகளுக்கும், நேபாளத்திற்கும் சென்று வந்துள்ளார் என்று கூறியவர்,  கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், சுமார் 10 தொலைபேசி எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவருடனும் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கன்னையா கொலை சம்பவத்தால் உதய்பூர் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே கன்ஹையாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

அவரை (கன்ஹையா லால்) கொலை செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும், நீதி வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என கன்னையா லாலின் மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் ஏற்பட்டதால், பல மாவட்டங்களில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது.  உதய்பூர் முழுவதும்  இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.