ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கண்ணையா லால் படுகொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொலையாளிக்கும் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த படுகொலை தொடர்பாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குறித்த விசாரணையில் ரியாஸ் அட்டாரி மற்றும் முகமத் கவுஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்ட இந்தியா டுடே நாளிதழ் ரியாஸ் அட்டாரி பா.ஜ.க.வின் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த இர்ஷத் சைன்வாலா இருவருக்குமான தொடர்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
படுகொலை சம்பவத்தின் போது பயன்படுத்திய ஆர்.ஜெ. 27 எ.எஸ். 2611 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை கடந்த 2013 ம் ஆண்டு ரியாஸ் வாங்கியுள்ளார். இதில் உள்ள 2611 என்பது மும்பையில் நடைபெற்ற தாக்குதல் தேதியான 26/11 யை குறிக்கும்வகையில் வாங்கியதாக கூறப்படுகிறது.
தாலிபான்கள் போன்று ராஜஸ்தானிலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் திட்டத்தோடு செயல்பட்டு வந்த இவருடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க.வில் இருந்து வரும் இர்ஷத் சைன்வாலா தொடர்பில் இருந்துள்ளார்.
2019 ம் ஆண்டு சவுதி அரேபியா சென்று வந்த ரியாஸை வரவேற்றுள்ளார் இர்ஷத் சைன்வாலா அதுதொடர்பான புகைப்படத்தையும் இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
தவிர, பா.ஜ.க. வின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மற்றொரு நண்பரான முகமது தாஹிர் உடன் பா.ஜ.க. கூட்டங்களிலும் ரியாஸ் கலந்துகொண்டதாக சைன்வாலா தெரிவித்துள்ளார்.
https://twitter.com/IndiaToday/status/1542890364121812992
இதுதொடர்பாக முகமது தாஹிரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு சென்றதாகவும் அவரது மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
கண்ணையாலால் படுகொலையில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து வெளியான இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.