கள்ளக்குறிச்சி
மோடி மற்றும் இ.டி,(அமலாக்கத் துறை)க்கும் நான் பயப்பட மாட்டேன் எனத் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
கூடலூரில் கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதற்குத் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
உதயநிதி,
”வரும் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். தி.மு.க., காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் வெற்றிக்கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கூட்டணி வெல்ல வேண்டும் என நீங்கள் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
திமுகவினர் இ.டி.க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். திமுகவிடம் உங்களுடைய பம்மாத்து வேலை ஒருபோதும் நடக்காது. அமலாக்கத் துறையினர் சென்ற மாதம் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினார்கள். சமீபத்தில் 2 நாட்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தினார்கள். இதில் எங்கும் எதுவும் சிக்கவில்லை.
பாஜக தலைவர் நேற்று கூட பேட்டியில் அடுத்த ரெய்டு உதயநிதி வீட்டில் நடக்கப் போகிறது என்கிறார்.
நீங்கள் வாருங்கள், எனது முகவரி கொடுக்கிறேன். நான் உங்களுக்கும், உங்கள் இ.டி.க்கும் பயப்படுபவன் அல்ல. நான் கலைஞர் பேரன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மகன். நான் மோடிக்கும், இ.டி.க்கும்(அமலாக்கத்துறைக்கும்) பயப்பட மாட்டேன். மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.
நான் சவால் விடுகிறேன், எப்போது வேண்டுமானாலும் வாருங்கள், சொல்லிவிட்டு வாருங்கள். நான் வீட்டிலேயே இருக்கிறேன். தி.மு.க.வின் ஒரு கிளைச் செயலாளரைக் கூட நீங்கள் பயமுறுத்த முடியாது.”
என்று உரையாற்றி உள்ளார்.