துபாய்

ந்திய ஊடகங்கள் இஸ்லாமியர் மீதான வெறுப்புச் செய்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என அமீரக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.   டில்லி நிஜாமுதின் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட சிலரால் இந்த பரவுதல் அதிகமானதாகச் செய்திகள் வெளியாகின.   இதையொட்டி இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே கொரோனாவை பரப்பி வருவதாக சில ஊடகங்கள் குற்றம் சாட்டின.  இதற்கு இந்தியப் பிரதமர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

இந்த ஊடகச் செய்திகளை அரபு நாடுகளில் உள்ள சிலர் சமூக வலைத் தளங்களில் பதியத் தொடங்கினர்.   இதனால் அரபு நாடுகளில் இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோர் இடையில் கலவரம் நேரிடலாம் என அஞ்சப்பட்டது.   அமீரகம், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகம் இவ்வாறு பதிவுகள் வெளியிடும் இந்தியர்கள் மத வெறுப்பு எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமீரக சட்டப்படி,”எந்த ஒரு மனிதரும் தனது கருத்து அல்லது பேச்சின் மூலம் எவ்வகையில் மற்றவர்கள் மீது வெறுப்பைக் காட்டினால் 5 வருடங்கள் வரை சிறை தண்டனை, அல்லது 5 லட்சம் முதல் 10 லட்சம் தினார் வரை அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படும்” என உள்ளது.  சென்ற மாதம் சமூக வலைத் தளத்தில் இன வெறுப்பு பதிவு இட்ட ஒரு அமீரக பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் முகமது நபி, இஸ்லாமிய கலாச்சாரம், இஸ்லாமியர்கள் ஆகியவற்றைத் தாக்கும் பதிவுகள் இடும் இந்தியர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.   ஏற்கனவே இது போல சமூக வலைத் தளங்களில் பதிவு இட்ட இந்தியர்களை அரேபிய நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ள தகவல்கள் வெளி வந்துள்ளன.    இவ்வாறு குற்றம் சாட்டப்படும் இந்தியர்களில் பலர் வெகு நாட்களாக அரபு நாடுகளில் வசிப்பவர்கள் ஆவார்கள்.

வெகுநாட்களாக இருப்பவர்களுக்கு அமீரக சட்டங்கள் தெரியாமல் இருக்காது.   எனவே அவர்கள் தவறான செய்தியை வெளியிட யோசிப்பார்கள்.  இதையொட்டி ஆய்ந்ததில் அவர்கள் இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை உண்மை என நம்பி பகிர்ந்தது தெரிய வந்துள்ளது.  குறிப்பாக இந்திய ஊடகங்கள் இஸ்லாமியர்கள் கொரோனாவை பரப்ப தாங்கள் விற்கும் பழங்களில் எச்சில் துப்பியதாக ஊடகங்களில் வந்த செய்தியைப் பலரும் பரப்பி உள்ளனர்.

இந்த செய்திகளை ஊடகங்கள் அடிக்கடி பரப்பியதால் இந்தியாவில் ஒரு சில இடங்களில் இஸ்லாமிய வியாபாரிகளைப் புறக்கணித்ததும் அடித்து விரட்டப்பட்டதும் அதிகரித்தன.  இந்த செய்திகள் பரப்பும் ஊடகங்களின் ஒளிபரப்பு அனைத்தும் அமீரகம் உள்ளிட்ட அனைத்து அரபு நாடுகளிலும் தெரிகிறது.  இதையொட்டி அமீரக அரசு இந்திய ஊடகங்கள் இது போல வெறுப்புச் செய்திகளைப் பரப்பக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு செய்திகளைப் பரப்புவதில் இந்தியத் தொலைக்காட்சிகளான ரிபப்ளிக் டிவி, ஜீ நியுஸ், இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி, டைம்ஸ் நவ் போன்றவை ஈடுபட்டுள்ளதால் இவற்றின் மீது அமீரக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்பப்படுகிறது.  அரபு நாடுகளில் பல மதம், இனம், மற்றும் மொழியினர் உள்ளதால் இவ்வாறு மதப் பிரச்சினையைத் தூண்டுவதை  அனுமதிக்கக் கூடாது என அங்குள்ள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : கல்ஃப் நியூஸ்