டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி சந்திரசூடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கடந்த வாரம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக, நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரை நியமனம் செய்து அறிவித்தார். இதையடுத்து அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
நீதிபதி பிண்டல் முன்னதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். நீதிபதி அரவிந்த் குமார் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படு வதற்கு முன்பு குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு, இந்தியத் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 16, 1961இல் பிறந்த நீதிபதி பிண்டல், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 62 வயதை அடைந்தவுடன் பதவியிலிருந்து விலக வேண்டும், இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டதால், அவர் மேலும் மூன்று ஆண்டுகள் சேவையில் நீடிப்பார்.
நீதிபதி குமார் ஜூலை 14, 1962-இல் பிறந்தார், ஜூலை 2023-இல் 61 வயதை எட்டுவார். கடந்த வாரம், ஐந்து நீதிபதிகள் பதவி உயர்வுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65இல் ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.