பெங்களூரு: ஏற்கனவே 3 துணை முதலமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது, கர்நாடகாவில் மேலும் 2 புதிய துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு புதிய துணை முதல்வர்களும் குருபா மற்றும் பழங்குடியின சமூகங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திராவைப்போல், கர்நாடகமும் 5 துணை முதல்வர்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த லக்ஷமன் சவாதி, தலித் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்த் கர்ஜோல் மற்றும் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த அஷ்வத் நாராயணன் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.
தற்போது அடுத்த முக்கிய சமூகங்களான குருபா மற்றும் பழங்குடியின சமூகங்களிலிருந்து புதிதாக 2 துணை முதல்வர்களை நியமிக்கப்படவுள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் சித்தராமையா குருபா சமூகத்தைச் சேர்ந்தவர்.
இதன்மூலம் தற்போதைய முதல்வர் எடியூரப்பாவின் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தை குறைக்கும் வகையிலும், பாரதீய ஜனதா அனைத்து சமூகத்தினருக்குமான கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் இந்த முயற்சிகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.