பழநி முருகன் கோயில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் 2004-ம் ஆண்டு பழநி கோயில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா மற்றும் தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு இடையில் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் தற்போது இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இதையடுத்து கடந்த 4-ம் தேதி முதல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பழநியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஐ.ஐ.டி குழுவினருடன் ஐம்பொன் சிலைகளின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறார் ஐ.ஜி பொன் மாணிக்கவேல்.
கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மலைக்கோயிலில் ஆய்வு நடந்து வருகிறது. மலைக்கோயிலில் உள்ள நவவீரர்கள் சந்நிதி, பெரிய நாயகியம்மன் கோயிலில் உள்ள சிலைகள், மலைக்கோயில் ‘டபுள் லாக்க’ரில் உள்ள ஐம்பொன் சிலைகள் மற்றும் சின்ன குமார சுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, கன்னிமார் சிலைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2004-ம் ஆண்டு பழநி கோயில் உதவி ஆணையராக இருந்த புகழேந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட தங்க நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோரை நேற்று இரவு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் ஸ்தபதி முத்தையாவுக்கு உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோயிலில் உள்ள சிலைகள் குறித்த விவரங்கள், அவற்றில் போலியான சிலைகள் கலந்திருக்கிறதா என்ற ரீதியில் இன்றும் விசாரணை தொடர்கிறது