
டிமா ஹசோ, அசாம்
ஆர் எஸ் எஸ் தலைவரின் திட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் மரணம் அடைந்தனர்.
அசாம் மாநிலம் டிமா ஹசோ மாவட்டத்தில் நாகர்கள் இனத்தவர் அதிகம் வசித்து வருகின்றனர். அதையொட்டி நாகர் இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களை ஒன்றாக்கி, கிரேட்டர் நாகலிம் என ஒரு பகுதியை உருவாக்க ஓரு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆர் எஸ் எஸ் தலைவர் ஜகதம்பா மால் ஒரு வரைவு திட்டம் ஒன்றை அரசுக்கு அளித்துள்ளார். அந்த திட்டத்தில் அவர், ”நாகர்கள் அதிகம் உள்ள இடங்களை முன்னேற்ற இன்னும் 10 வருடங்களுக்கு விசேஷ திட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதற்காக விசேஷ அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். டிமோ ஹசோ மாவட்டம் கிரேட்டர் நாகலிம் பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவர் இந்த வரைவு திட்டமானது முழுக்க தனது சொந்த எண்ணம் எனவும், மத்திய மாநில அரசுகளுக்கோ ஆர் எஸ் எஸ் அமைப்புக்களுக்கோ எந்த ஒரு சம்மந்தமும் இல்லை எனவும் அறிவித்திருந்தார். ஆயினும் அம்மாவட்ட மக்களிடையே இது கடும் அதிருப்தியை உண்டாக்கியது. சில நாட்களாகவே மாவட்ட மக்களில் பலர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று பல்வேறு அமைப்புகள் டிமா ஹசோ மாவட்டத்தில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த நேரத்தில் வன்முறை நிகழலாம் என்னும் அச்சத்தில் மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. போராட்டக்காரர்கள் ஓடும் ரெயிலை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டனர்.
மாவட்டத்தில் வெடித்த கடும் வன்முறையை அடக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தற்போது மாவட்டம் எங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலம் முழுவதும் கடும் பதட்டம் நிலவி வருகிறது.
[youtube-feed feed=1]