மும்பை:
மகாராஷ்டிராவில் வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்காத 2 மாநகராட்சி கவுன்சிலர்களை சஸ்பெண்ட் செய்து பாஜ மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாநகராட்சி கவுன்சிலில் பாஜ-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. முதல் கூட்டத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிபரப்பட்டது. அப்போது ‘பாரத் மாதாகி ஜே’ என்ற கோஷமும் எழுப்பப்பட்டது.
அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லீமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தனர். இதை கண்டித்து பாஜ, சிவசேனா கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கவுன்சிலின் மைய பகுதிக்குள் வந்த அவர்கள் டேபிள், நாற்காலிகள், மைக்குகளை, மின்விசிறிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
‘‘இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்றால் வந்தே மாதரம் பாட வேண்டும்’’ என்று சிவசேனா, பாஜ கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பாஜ மேயர் பகத்வன்தாஸ் காதாமோதே 2 முறை கூட்ட நடவடிக்கையை ஒத்திவைத்தார். வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்காத 2 கவுன்சிலர்களையும் இன்றைய கூட்ட நடவடிககையில் இருந்து சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டார்.
இது குறித்து ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ இம்தியாஸ் ஜலீல் கூறுகையில், ‘‘ வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த சட்டமும் கட்டாயப்படுத்தவில்லை. இது பாரம்பரிய பாடல் என்பதால் நாங்கள் மதிக்கிறோம். இனி வரும் காலங்களில் எழுந்து நின்று கவுன்சிலர்கள் மரியாதை அளிப்பார்கள்’’ என்றார்.
இந்த மாநகராட்சியில் மொத்தம் உள்ள 113 இடங்களில் ஏஐஎம்ஐஎம் கட்சி தான் பிரதான எதிர்கட்சியாக உள்ளது. 25 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் சிவசேனா 29 மற்றும் பாஜ 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 8 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும், சுயேட்சைகள் 24 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.