காஜியாபாத்

நாட்டையே உலுக்கிய நிதார் தொடர் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரிந்தர் கோலி மற்றும் மொனிந்தர் சிங் பந்தேர் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நொய்டாவிலுள்ள நிகாரியில் கடந்த 2005-2006 வருடங்களில், பல இளம்பெண்கள், மற்றும் குழந்தைகள் காணாமல் போனதும், பின் பல எலும்புக் கூடுகள் மொனிந்தர் சிங் பந்தேரின் வீட்டில் புதைக்கப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டதும் தெரிந்ததே.

இது தொடர்பாக சுரிந்தர் கோலி மற்றும் மொனிந்தர் சிங் பந்தேர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களின் மேல் பலாத்காரம், கொலை, கடத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் கீழ் 16 வழக்குகள், தொடரப்பட்டன.  அதில் எட்டு வழக்குகளில் இருவருக்கும் தண்டனைகள் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது மேலும் ஒரு வழக்கில் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு, நொய்டா செக்டர் 30ல் வீட்டு வேலை பார்க்கும் பிங்கி சர்க்கார் என்னும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று வீட்டில் புதைத்த வழக்கு ஆகும்.  பிங்கி தான் வேலை பார்க்கும் வீட்டில் டி வி பார்த்து விட்டு தாமதமாக வீடு திரும்பும் போது காணாமல் போனார்.  பின்பு அவர் இந்த இருவராலும் கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தீர்ப்பில், “இது அரிதிலும் அரிதான தீர்ப்பு,  இருவரும் சிறைத்தண்டனை கொடுத்தால் திருந்தி வாழ்வார்கள் என்பதற்கு வாய்ப்பே இல்லாத காரணத்தாலும், இது வேறு யாரையும் இத்தகைய கொடூர கொலைகள் செய்வதை தடுக்கும் வகையிலும் மரண தண்டனை வழங்கப்படுகிறது: என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்ட எட்டு வழக்குகளிலும் சுரிந்தர் கோலிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.   முதல் வழக்கில் இருவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனை அப்பீலில் கோலிக்கு மரணதண்டனையும், பந்தேருக்கு ஆயுள் தண்டனையுமாக குறைக்கப்பட்டது.  தற்போது பந்தேர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். கோலி இன்னும் சிறையில் இருக்கிறார்.  இந்த தீர்ப்பையொட்டி பந்தேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.