நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை முறையின்றி திருடியது போலவே, டிவிட்டரும் தனது பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு தனது பயனர்களின் விவரங்களை டிவிட்டர் விற்றுள்ளது.  கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது.

இந்த நிலையில்தான் தற்போது ட்விட்டர் நிறுவனமும் இந்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.   பேஸ்புக்கில் திருடப்பட்ட தகவல்கள் எல்லாம் , அலெக்சாண்டர் குஹன் என்பவர் மூலம்தான் நடந்தது.    ”குளோபல் சைன்ஸ் ரிசர்ச்” என்று நிறுவனத்தை இதே நபர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு ட்விட்டரில்  இருந்து சில தகவல்களை பெற்று இருக்கிறது. ட்விட்டரில் பயனாளிகளின் தகவல்களை, அவர்களுக்கு தெரியாமல், ட்விட்டர் இவருக்கு கொடுத்து இருக்கிறது. தற்போது, இந்த நிறுவனத்திற்கு தகவல்கள் விற்கப்பட்டதை ட்விட்டர் ஒப்புக்கொண்டுள்ளது.