நைஜிரிய அதிபரின் சர்ச்சைக்குரிய டிவிட்டை நீக்கியதால், கோபமடைந்த அந்நாட்டு அதிபர் முகமது புகாரி, நாட்டில் டிவிட்டர் இணையதள பயன்பாட்டுக்கு அதிரடியாக தடை போட்டுள்ளார்.
சமூக வலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தளங்களின் நாட்டின் கொள்கைகளை மீறி செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே இதுபோன்ற புகாரில் சிக்கிய பேஸ்புக் நிறுவனர், அமெரிக்க செனட் மூன்பு தோன்றி விளக்கம் அளித்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. இந்தியாவிலும் சமூக வலைதள செயல்பட்டுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
இந்த நிலையில், நைஜீரிய அதிபரின் பதிவை நீக்கியதால் அந்நாட்டில் டுவிட்டருக்கு காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியா நாட்டின் அதிபராக முகமது புகாரி (வயது 78) பதவி வகித்து வருகிறார். இவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள டிவிட்டில், போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்யும் வகையில், “அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசை எதிர்ப்பவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியிலேயே பதில் அளிக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.
அவரது பதிவு நாட்டில் மீண்டும் உள்நாட்டுப் போரை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, டிவிட்டர் நிர்வாகம், அவரது பதிவை நீக்கியது.
இதுகுறித்து அந்த நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லாய் முகமது கூறும்போது, “நைஜீரியாவில் டுவிட்டரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளது. போலீஸ் நிலையங்களை எரித்து, போலீசாரை கொலை செய்வோரின் பதிவுகள், வீடியோக்கள் டுவிட்டரில் வெளியாகின்றன. அதேநேரம் நாட்டின் பாதுகாப்பு கருதி அதிபர் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டிருக் கிறது. எனவே எங்கள் நாட்டில் டுவிட்டருக்கு காலவரையின்றி தடை விதிக்கப்படுகிறது” என்றார்.
டிவிட்டர் தடையை எதிர்த்து, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் அயர்லாந்து நாடுகள் நைஜிரியாவின் நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.