டில்லி:
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, உச்சநீதிமன்றம் வெளியே பெண் வழக்கறிஞர்கள், பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக முன்னாள் உச்சநீதி மன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறினார். இது நாடு முழுவதும் அதிர்லகளை எழுப்பியது. இதற்கு மறுப்பு தெரிவித்து ரஞ்சன் கோகாய் இது தொடர்பாக விசாரணை செய்ய நீதிபதிகள் பாப்டே தலைமையில் மூவர் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு தலைமை நீதிபதியிடமும், புகார் கொடுத்த பெண்ணிடமும், மூடிய அறைக்குள் ரகசிய விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு 2 நாட்கள் ஆஜரான புகார் கொடுத்த பெண், பின்னர் தான் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, நேற்று, இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமைநீதிபதி மீதான பாலியல் புகாருக்கு முகாந்திரம் இல்லை என்று கூறியது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாலியல் புகார் அளித்த பெண் மூவர் குழு வழங்கிய தீர்ப்பு குறித்து, ‘மிகவும் வருத்தமளிக்கும் முடிவு. ‘நலிந்த பிரிவினருக்கு நாம் நாட்டில் இருக்கும் அமைப்புகள், நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை இழக்கும் நிலையில் நான் இருக்கிறேன்’ தற்போது தான் மிகவும் அச்சத்தோடு இருக்கிறேன். நானும் எனது குடும்பமும் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். ‘
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர்கள், பெண்கள் அமைப்பினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் குறித்து சரியான விசாரணை நடத்த வேண்டும், தற்போது நடைபெற்ற விசாரணை போலியான விசாரணை என்றும் பாலியல் வழக்கை எதிர்கொண்ட விதம் சரியில்லை என வழக்கறிஞர்கள், மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டி கோஷமிட்டனர்.
இதன் காரணமாக உச்சநீதி மன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.